ஷா ஆலம், ஆக. 16 - மூத்த குடிமக்கள் சிரமமின்றி பயன்படுத்துவதற்கு ஏதுவாக பொது கழிப்பறைகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்குமாறு சிலாங்கூர் அரசு ஊராட்சி மன்றங்களை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற வசதிகள் வயதானவர்களின் சுயமான நடமாட்டத்தை உறுதி செய்யும் என்று ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சுவர் கைப்பிடிகள், கைப்பிடி கம்பிகள், வழுக்காத தரை மற்றும் அவசரகால பட்டன்கள் ஆகியவை சிறந்த வடிவமைப்பு மூலம் பொது கழிப்பறைகள் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகளில் அடங்கும் என்று
அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 853,760 பேர் என்ற புள்ளிவிவரத் துறையின் தரவை இங் மேற்கோள் காட்டினார்.
வயதாகும் போது தங்களின் அன்றாட வழக்கங்களையும் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடிய பல்வேறு சவால்களை முதியோர் எதிர்கொள்கிறார்கள். உடல் வலிமை, இயக்கம் மற்றும் சமநிலை குறைவது வழக்கமான ஒன்றாகிறது. இதனால் பொது கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான எளிய பணிகூட கடினமாகிறது என்று அவர் கூறினார்.
இதன் அடிப்பபையில் வயதானவர்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிலையான வசதிகள் தேவை. பொது கழிப்பறைகளை முதியோர் நட்புறவு கொண்டவையாக மாற்ற ஊராட்சி மன்றங்கள் உலகளாவிய வடிவமைப்பு கொள்கைகள் பயன்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கான வசதிகளை உறுதி செய்வதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இங் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் முதியோருக்கு நட்புறவான பொது கழிப்பறைகள் அதிக அளவில் தேவை
16 ஆகஸ்ட் 2025, 9:20 AM




