ஜோகூர் பாரு, ஆக. 16- கடந்த ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்ட 'ஓப்ஸ் லக்சுரி' நடவடிக்கையின் மூலம் செல்லத்தக்க சாலை வரி மற்றும் காப்புறுதி இல்லாமல் சாலையைப் பயன்படுத்திய 270 சொகுசு வாகனங்களை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) நாடு முழுவதும் பறிமுதல் செய்துள்ளது.
மோட்டார் வாகன உரிமம் அல்லது காப்புறுதி இல்லாமல் சாலையைப் பயன்படுத்தும் சொகுசு வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாட்லி ராம்லி தெரிவித்தார்.
சாலை வரி இல்லாமலும் காப்புறுதி இன்றியும் சாலையைப் பயன்படுத்திய சொகுசு வாகனங்கள் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை இதுவாகும் என அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட உரிமையாளர் சாலை வரி, காப்புறுதி மற்றும் சம்மன் நிலுவைத் தொகையை செலுத்தும் வரை வாகனம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் சமீபத்தில் இங்குள்ள தாமான் டாயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஜோகூர் பாருவில் சாலை வரி மற்றும் காப்புறுதி இல்லாத ஃபெராரி, ஆண்டுக்கு 12,000 மதிப்புள்ள சாலை வரி செலுத்த வேண்டிய லம்போர்கினி ஹுராகான், கோலாலம்பூரில் ஆண்டுக்கு 29,000 வெள்ளி சாலை வரி செலுத்த வேண்டிய ரோல்ஸ் ரோய்ஸ் ஆகிய சொகுசு வாகனங்களும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இந்த இரண்டு வார சோதனை நடவடிக்கையில் நாடு முழுவதும் 270 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ஜோகூரில் பறிமுதல் செய்யப்பட்ட 11 வாகனங்களும் அடங்கும்.
கோலாலம்பூரில் வெளிநாட்டினர் பயன்படுத்திய ஒன்பது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அவற்றில் பல வாகனங்கள் தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சொந்தமானவை என்றார்.
ஜே.பி.ஜே. சோதனையில் சாலை வரி, காப்புறுதி இல்லாத 270 சொகுசு வாகனங்கள் பறிமுதல்
16 ஆகஸ்ட் 2025, 9:01 AM


