ஷா ஆலம், ஆக. 16- மதிப்பீட்டு வரி பாக்கி வைத்திருக்கும் சொத்து உரிமையாளர்களைக் கண்டறியும் நோக்கில் பண்டார் ரிம்பாயுவில் வாரண்ட் சோதனை நடவடிக்கையை கோல லங்காட் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எல்.) மேற்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கிய இந்த இரண்டு நாள் நடவடிக்கையில் 69 வீடுகள் மொத்தம் வெ. 82,531.17 நிலுவைத் தொகையை செலுத்தாதிருப்பதை தாங்கள் கண்டறிந்ததாகத் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையில் நகராண்மைக் கழகத்தின் ஒன்பது வருவாய் பிரிவு ஊழியர்கள் மற்றும் மூன்று அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மதிப்பீட்டு வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய வளாக உரிமையாளர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையை செயல்படுத்தியதன் மூலம் மொத்த நிலுவைத் தொகையிலிருந்து 53,490.65 வெள்ளியை வசூலிக்க முடிந்தது என்று முகநூலில் வெளியிட்டப் ஒரு அறிக்கையில் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி அனைத்து வளாக உரிமையாளர்களும் தங்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துமாறு எம்.பி.கே.எல். கேட்டுக்கொண்டுள்ளது.
சொத்து உரிமையாளர்கள் எம்.பி.கே.எல். அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது அதன் வாடிக்கையாளர் சேவை முகப்பில் அல்லது இயங்கலை வாயிலாக வரியை செலுத்தலாம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


