ஷா ஆலம், ஆக. 16- கெஅடிலான் ராக்யாட் கட்சியின் சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத்தின் 2025-2028 தவணைக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமைத்துவம் அண்மையில் வெளியிட்டது.
மொத்தம் 54 பதவிகளுக்கான இந்த நியமனத்தில் இடம் பெற்றவர்களில் எண்மர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத் தலைவர் பொறுப்பை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்றுள்ள வேளையில் துணைத் தலைவராக தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவித் தலைவர்களாக கோத்தா டாமன்சாரா தொகுதி கெஅடிலான் தலைவர் எலிசபெத் வோங், உலு லங்காட் தொகுதி தலைவர் எம்.ராஜேந்திர குமார், கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான்ஹூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு முகமது இமான் ஹபிக் முகமது ஹபிசியும் மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு சலாஸியா டிசாம் நியமனம் பெற்றுள்ளனர்.
அதே வேளையில் செயலாளர் பதவிக்கு முகமது கம்ரி கமாருடினும் நிர்வாகச் செயலாளர் பதவிக்கு பிரதமர் துறையின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்புப் பிரிவின் அதிகாரி ஜஸ்டின் ராஜ் சவரிமுத்துவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மாநில கெஅடிலான் தொகுதி பிரிவுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவர்களில் எம்.சிவபாலன் ( கோல சிலாங்கூர்), எம்.பிரவின் (பூச்சோங்) கோத்தா ராஜா (டாக்டர் ஜி.குணராஜ்), டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் (சுங்கை பூலோ) ஆகியோரும் அடங்குவர். உலு சிலாங்கூர் தொகுதி தலைவரான டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் மாநில தேர்தல் குழுவின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட எழுவரில் சுங்கை பூலோ தொகுதி முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவும் ஒருவராவார்.
மாநில கெஅடிலான் பயிற்சி மற்றும் அகாடமிப் பிரிவின் தலைவர் பொறுப்பு சங்கீதா ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.