கோல சிலாங்கூர், ஆக 15- சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிமவள அலுவலகம் (பி.டி.ஜி.) ஈஜோக், கம்போங் ஶ்ரீ செந்தோசாவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டது.
இந்த நிலம் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோத கழிவுகளை அழிக்கும் இடமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற ஒன்பது மணி நேர ஒருங்கிணைந்த நடவடிக்கையில் குப்பை அழிப்பு மையத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 200,000 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள நான்கு கனரக இயந்திரங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி மன்றங்கள் மற்றும் தொடர்புடைய துறைகள் நில உரிமையாளர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் சம்மன்களை வழங்கியப் பின்னர் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அகமது பாட்ஸ்லி அகமது தாஜுடின் கடந்த மார்ச் மாதம் அந்தப் பகுதிக்குச் சென்று ஒரு விரிவான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தார்
சட்டவிரோத கழிவு மையங்கள் தொடர்பான பிரச்சினைகள் அச்சமூட்டும் வகையில் பெருகி வருவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிமவள துறையின் அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் முகமது நட்சிருல் ஹபிஸி எம். டாவூட் கூறினார்.
ஈஜோக் சட்டவிரோத குப்பை அழிப்பு மையம் மீது நடவடிக்கை
16 ஆகஸ்ட் 2025, 5:30 AM



