கிள்ளான், ஆக. 16- கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்துவதற்காக 54 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் தூர்வாரும் பணி ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதிகப்படியான குப்பைகள் குவிந்ததைத் தொடர்ந்து கிள்ளான் ஆற்றின் நீர்மட்டம் அதன் உண்மையான நான்கு மீட்டரிலிருந்து ஒரு மீட்டராக குறைந்துள்ளது. ஆற்றில் எஞ்சியுள்ளவை வெறும் குப்பை மற்றும் சேறு மட்டுமே என்று உள்கட்டமைப்பு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
மாநில அரசு சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் (எஸ்.எம்.ஜி.) திட்டத்தின் கீழ் லண்டாசன் லுமாயான் நிறுவனம் ஒரு திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிள்ளான் நதியை ஆழப்படுத்தும் பணியைத் தொடங்கி நடத்தி வருகிறது.
இந்நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் மற்றும் மொத்த குப்பைகள் அகற்றப்பட்டன. அதோடு மட்டுல்லாமல் மெத்தைகள், மிதிவண்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
ஆற்றின் தூய்மையில் கவனம் செலுத்தாத செயல்களின் விளைவுதான் இது. இதுவரை மூன்று இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணி 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முழு கிள்ளான் ஆற்றையும் தூய்மைப்படுத்த ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான் ஆற்றின் ஆழம் நான்கு மீட்டர். ஆனால் மூன்று மீட்டர் அளவுக்கு குப்பைகள் மற்றும் சேறு நிறைந்திருப்பதால் துப்புரவுப் பணி சிக்கலானதாக உள்ளது. மேலும், ஒரு மீட்டர் மட்டுமே தண்ணீர் உள்ளது.
இருப்பினும், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதை நான்கு மீட்டர்களாக மாற்ற வேண்டும். இதனால் ராசாவ் நதிக்கு நீர் வழங்கவும் வெள்ளப் பெருக்கைக் குறைக்கவும் முடியும் என்று அவர் கூறினார்.
கிள்ளான் ஆற்றை தூர்வாரும் பணி - ஐந்தாண்டுகளில் சீர்படுத்த நடவடிக்கை
16 ஆகஸ்ட் 2025, 4:39 AM




