கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - உலக அளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வந்தாலும், 2025-ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) வளர்ச்சி கணிப்பை, 4.0 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக்காடாக நிலைநிறுத்தியிருப்பதாக பேங்க் நெகாரா மலேசியா தெரிவித்துள்ளது.
மேலும், சவாலான வெளிப்புற சூழல், குறிப்பாக அமெரிக்க வரிக் கொள்கைகளையும் அதன் பல்வேறு விளைவுகளையும் முன்னதாகவே கருத்தில் கொண்டதால், அந்த முன்கணிப்பை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீட் கஃபொர் கூறினார்.
"மார்ச் மாதத்திலிருந்து மிகவும் சவாலான வெளிப்புற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலேசியாவிற்கான அண்மைய வரி குறைப்பு சில உறுதிப்பாட்டை அளித்தாலும், மலேசியா போன்ற ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்திற்கு அதிக வரி விதிப்பு குறிப்பிடத்தக்க எதிர்மறை தாக்கமாகவே உள்ளது," என்றார் அவர்.
மின் மற்றும் மின் பொருள்களுக்கான தொடர்ச்சியான தேவை, வலுவான சுற்றுலா செயல்பாடு மற்றும் மீள்தன்மை கொண்ட உள்நாட்டு பயனீடு ஆகியவற்றால் வரி விதிப்பின் தாக்கம் ஓரளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா