கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - இவ்வாண்டு இறுதிக்குள், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என், உருவாக்கிய Price Catcher செயலியில் குறைந்தது ஒரு லட்சம் புதிய பயனர்களைச் சேர்க்க தங்கள் தரப்பு இலக்கு கொண்டிருப்பதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.
இதுவரை 5 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் இணைந்துள்ளனர் என்றார். பொருள்களின் விலைகளை ஒப்பிடுவதற்கும், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது பயனர்கள் சிறந்த முடிவை எடுப்பதற்கும், அச்செயலி பயனுள்ள தளமாக இருக்கிறது.
அதனால், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே நம்பிக்கை தெரிவித்தார்.
அதன் மொத்த எண்ணிக்கையில் 62 விழுக்காட்டினர் மட்டுமே Price Catcher செயலியைப் பயன்படுத்துவது, மக்களின் விழிப்புணர்வு குறைந்து காணப்படுவதைக் காட்டுவதாக டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
பொருள்களின் விலை குறித்த தகவல்களைப் பயனர்களுக்கு வழங்கும் நோக்கில், 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Price Catcher செயலியை மேம்படுத்த, கே.பி.டி.என் உறுதியாக உள்ளதாக டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.
பெர்னாமா


