கிள்ளான், ஆக. 15 - செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் முயற்சியால் இங்குள்ள ஹைலண்ட்ஸ் மற்றும் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிகளுக்கு 360,000 வெள்ளி மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று இவ்விரு பள்ளிகளுக்கும் வருகை புரிந்த துணைக் கல்வியமைச்சர் வோங் கா வோ இந்த மானியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் கரையான் அரிப்பால் சேதமடைந்த கூரைகளை சரி செய்வதற்கு 120,000 வெள்ளியும் பள்ளி சிற்றுண்டிச் சாலையின் சீரமைப்பிற்கு 40,000 வெள்ளியும் இதர சீரமைப்பு பணிகளுக்கு மேலும் 40,000 வெள்ளியும் வழங்க துணையமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வீ.குணராஜ் கூறினார்.
பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இப்பள்ளிக்கு துணையமைச்சர் மொத்தம் 200,000 வெள்ளியை அங்கீகரித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
கூரை இடிந்து விழுந்த சம்பவத்தால் மிகவும் மோசமான நிலையிலுள்ள பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு தமது கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த துணையமைச்சர், பள்ளியின் நிலைமையை நேரில் கண்டதோடு அதன் சீரமைப்பு பணிகளுக்கு உதவும் மடாணி அரசாங்கத்தின் கடப்பாட்டையும் வெளிப்படுத்தியதாக குணராஜ் குறிப்பிட்டார்.
இப்பள்ளியில் கூரைகளை சரி செய்வதற்கு 120,000 வெள்ளி ஒதுக்கப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலும் 40,000 வழங்குவதாக வோங் அறிவித்துள்ளார் என்றார் அவர்.
கழிப்பறைகளை சீரமைப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் மடாணி அரசாங்கம் வழங்கிய தலா 70,000 வெள்ளி நிதியில் புனரமைக்கப்பட்ட பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியின் கழிப்பறைகளை பார்வையிட்ட துணையமைச்சர், அதன் தரம் மற்றும் தூய்மை குறித்து மனநிறைவு தெரிவித்தார்.
துணையமைச்சரின் வருகையின் மூலம் இவ்விரு பள்ளிகளுக்கும் மொத்தம் 360,000 வெள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுமூகமான அணுகு முறையின் வாயிலாக மேற்கொண்ட முயற்சிகள் உரிய பலனைத் தந்துள்ளன. ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகவும் உரத்த குரலில் கோரிக்கை வைப்பதன் மூலமாகவும் எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என அவர் சொன்னார்.
ஹைலண்ட்ஸ், பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.360,000 வெள்ளி மானியம்
15 ஆகஸ்ட் 2025, 6:31 AM