கம்போடிய எல்லையில் பாதுகாப்பு - மலேசியா தலைமையிலான பார்வையாளர் குழு ஆய்வு

15 ஆகஸ்ட் 2025, 4:57 AM
கம்போடிய எல்லையில் பாதுகாப்பு - மலேசியா தலைமையிலான பார்வையாளர் குழு ஆய்வு

புனோம் பென், ஆக. 15 - கம்போடியா - தாய்லாந்து  இடையிலான போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில்  ஏழு நாடுகளைக் கொண்ட தற்காலிகப் பார்வையாளர் குழு   பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்காக நேற்று எல்லைப் பகுதிக்கு வருகை மேற்கொண்டது.

கம்போடியாவிற்கான மலேசிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் நஸ்லி அப்துல் ரஹ்மான் தலைமையிலான  அந்தக் குழு எல்லைப் பகுதியில் சமீபத்திய முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்காக கள ஆய்வு மேற்கொண்டது.

எல்லையில் மோதல்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கையில் மலேசியா உதவ வேண்டும் என கம்போடிய வெளியுறவு மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சின் பேச்சாளர் சம் சௌன்ரி வலியுறுத்தினார்.

மோதல் அதிகரிப்பதைத் தடுக்கவும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைப் பாதுகாக்கவும் ஒரு வலுவான மற்றும் பாரபட்சமற்ற கண்காணிப்பு செயல்முறையை
நடப்பு ஆசியான் தலைவராகவும் போர்நிறுத்தத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கும் மலேசியா உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கம்போடியா வலியுறுத்துகிறது என்று அவர்  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த தற்காலிகப்
பார்வையாளர் குழுவில் ஆசியான் உறுப்பு நாடுகளான புருணை, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

அந்த பிரதிநிதிகள்
பான்டே மீன்ச்சே மாநிலத்தில் உள்ள போயுங் டிராகவுன் எல்லை சோதனைச் சாவடியைப் பார்வையிட்டதாக கம்போடிய பாதுகாப்பு அமைச்சு கூறியது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற கம்போடியா-தாய்லாந்து பொது எல்லைக் குழுவின் (ஜிபிசி) சிறப்புக் கூட்டத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த பார்வையாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரதேசம் தொடர்பாக ஆயுத மோதலில் ஈடுபட்ட கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் சேர்ந்து மலேசியா வெற்றி பெற்றது.  இந்த மோதல் ஜூலை 28ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.