ஷா ஆலம், ஆகஸ்ட் 15: பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, குறைந்தபட்ச நிலையான விநியோக கட்டணத்தை அமல்படுத்தும் திட்டத்தை மலேசிய கிராப் ஓட்டுநர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
கட்டண உயர்வு டெலிவரி மற்றும் இ-ஹெய்லிங் துறையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அதன் தலைவர் முகமட் அஸ்ரில் அஹ்மட் கூறினார்.
"தற்போதைய சில ஓட்டுநர்கள் நிரந்தர வேலைகளுக்கு மாறத் தொடங்கியுள்ளதால், இந்த கட்டண உயர்வுக்கான கோரிக்கை ஓட்டுநர்களிடமிருந்து வந்தது.
"கட்டணம் அதிகரிக்கப்பட்டால், சிறந்த வருமானம் காரணமாக ஓட்டுநர்கள் இத்துறையில் நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.
"ஆனால், அதே நேரத்தில், டெலிவரிக்கான தேவை குறையக்கூடும். ஏனெனில் மக்கள் வெளியே சென்று தாங்களாகவே பொருள்களை வாங்கத் முற்படுவார்கள்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
முன்னதாக, மலேசிய மைக்ரோ பிசினஸ் அசோசியேஷன் (மாம்பா) இந்த கட்டணத்தை செயல்படுத்துவது இணைய ஷோப்பிங் நடவடிக்கைகளை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனால் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சிறு தொழில்முனைவோரை எதிர்மறையாக பாதிக்கும் என்று விவரித்தது.
720 இணைய பயனர்களை உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், 93.5 சதவீதம் பேர் டெலிவரி செலவு அதிகரித்தால் வாங்குவதைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்று ஒப்புக்கொண்டதாக மாம்பா தெரிவித்தார்.
குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் சிறிய அளவில் மட்டுமே வாங்குவோம் என்று 59 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
கிராப்கார் போன்ற ரைடு-ஹெய்லிங் சேவைகளுக்கு இந்த நிலைமை ஒரு நன்மையை அளிக்கிறது என்று முகமட் அஸ்ரில் மேலும் கூறினார். ஏனெனில், பயனர்கள் இணையம் ஆர்டர் செய்வதற்குப் பதிலாக கடைக்குச் செல்ல போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள்.
கட்டணங்கள் மிக அதிகமாக இருந்தால், டெலிவரி ஆர்டர்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், ஓட்டிநர்களுக்கான வேலை அளவும் குறையும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஓட்டுநர்கள் அதிக ஆர்டர்களைப் பெறுவதை உறுதிசெய்ய, நீண்ட காலத்திற்கு தற்போதைய கட்டண விகிதத்தைப் பராமரிப்பது சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், ரைடர்கள் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கூடுதல் வருமானத்தை ஈட்டவும் அஸ்ரில் பரிந்துரைத்தார்.


