கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 — வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஜூலை 9 ஆம் தேதி வரை 34,000க்கும் மேற்பட்ட ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய மொத்தம் 434 நிறுவனங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தோட்ட மற்றும் பொருட்கள் அமைச்சகம் (KPK) இன்று தெரிவித்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதையும் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதையும் இந்த சிறப்பு ஒப்புதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதன் துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் கூறினார்.
“பற்றாக்குறையைச் சமாளிக்க, தோட்டத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சிறப்பு ஒதுக்கீடு ஒப்புதல்களை அரசாங்கம் வழங்கியுள்ளது,” என்று அவர் இன்று கேள்வி பதில் நேரத்தில் மக்களவையில் தெரிவித்தார்.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ கே கூ ஹாமின், தோட்டத் துறையில், குறிப்பாக செம்பணை மற்றும் ரப்பர் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்த கேள்விக்கு சான் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி குடிவரவுத் துறையின் புள்ளிவிவரங்கள் தோட்டத் துறையில் 258,153 தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதிச் சீட்டு (PLKS) வைத்திருப்பவர்கள் இருப்பதாகக் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இது இன்னும் போதுமானதாக இல்லை என்றும், அனுமதி காலாவதியான பிறகு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, 30,000 முதல் 40,000 தொழிலாளர்கள் கூடுதலாகத் தேவைப்படுவதாகத் தொழில்துறை தெரிவித்துள்ளது என்றும் சான் குறிப்பிட்டார்.


