கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான இ.பி.எப் நெகிழ்வு கணக்கிலிருந்து மொத்தம் 4.63 மில்லியன் இ.பி.எப் சந்தாதாரர்கள் 14.79 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பணத்தை மீட்டுள்ளனர்.
ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, 55 வயதுக்குட்பட்ட மொத்த 13.2 மில்லியன் உறுப்பினர்களில் 35 விழுக்காட்டினர் இந்தத் தொகையை மீட்டுள்ளனர். நெகிழ்வான கணக்கில் மீதமுள்ள மொத்த சேமிப்பு 10.16 பில்லியன் ரிங்கிட் என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஏழ்மையில் உள்ளவர்கள் இன்றைய வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்ள உதவும் வகையில், கணக்கு 1 சேமிப்பில் உள்ள 30 விழுக்காடு பணத்தை கணக்கு 3க்கு மாற்றும் சிறப்பு பணத்தை 2025 இல் எப்போது அரசாங்கம் அனுமதிக்கும் என்று பெரிக்காத்தான் நேசனல் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிடான் காசிம் நிதி அமைச்சரிடம் வினவியிருந்தார்.
முன்னதாக EPF அனுமதித்த சிறப்பு பணம் முறை, குறிப்பாக கணக்கு 1, COVID-19 தொற்றுநோயின் சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமே ஆகும். அவை தற்காலிகமானவை என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியது.
ஒரு சமூகப் பாதுகாப்பு நிறுவனமாக இ.பி.எப்வின் முக்கிய பணி, உறுப்பினர்களின் வயது முதிர்ந்த காலத்தில் செலவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஓய்வூதிய சேமிப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதாகும்.