ஷா ஆலம், ஆக.14 - மலேசியா விளையாட்டுப் போட்டியை (சுக்மா 2026) ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநிலம் முன்மொழிந்தபடி சிலம்பம் முவாய்தாய், பெந்தாங்க் ஆகியவை விருப்பத் தேர்வு போட்டிகளாக இடம்பெறும்.
இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சுக்மா உச்சக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக தேசிய விளையாட்டு மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இதன் மூலம் 22வது சுக்மாவில் போட்டியிடும் மொத்த விளையாட்டுகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 30 கட்டாய விளையாட்டுகள் மற்றும் ஏழு விருப்பத்தேர்வு விளையாட்டுகள் ஆகும்.
இதற்கு மேல் கூடுதல் விளையாட்டுகளைச் சேர்ப்பதற்கான எந்தவொரு திட்டங்களும் அல்லது முறையீடுகளும் பரிசீலிக்கப்படாது என்று சுக்மா உச்சக் குழுவும் முடிவு செய்துள்ளது என்று இன்று தெரிவித்தது.
அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாது என வெளிவந்த தகவல் இந்தியா சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ், புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர் ராஜீவ், கோத்தா கெமுனிங் உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமியின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை கொண்டுச் சென்றனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த மூன்று போட்டிகளையும் சுக்மாவில் இணைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மாநில ஒப்புதல் அளித்தது.
சுக்மாவில் சிலம்பம் உள்ளிட்ட மூன்று போட்டிகளுக்கு இடம்
14 ஆகஸ்ட் 2025, 8:45 AM


