ஷா ஆலம், ஆக. 14 - மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அரியணை அமர்ந்து அடுத்தாண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வெளியிடப்படும் ‘SIS` எனும் சிறப்பு வாகன எண் பட்டையை ஏலத்தில் பெறுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
“SIS“ எனும் இந்த சிறப்பு வெள்ளி விழா எண் பட்டைகளுக்கான பதிவை ஏல நடவடிக்கையின் வாயிலாக சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) Sistem JPJeBid எனும் இணைப்பின் வழி மேற்கொள்ளும் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
‘சுல்தான் இட்ரிஸ் ஷா‘ என்ற பெயரின் சுருக்கத்தைக் குறிக்கும் இந்த எண் பட்டை மாநிலத்தின் ஒன்பதாவது சுல்தானாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வரும் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்படுகிறது.
பொது மக்கள் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி எதிர்வரும் ஆகஸ்டு 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி வரை இந்த பிரத்தியேக எண் பட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஏல முடிவுகள் எதிர்வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அறிவிக்கப்படும்.
Sistem JPJeBid முறையில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த ஏலம் நடத்தப்படும். ஜே.பி.ஜே. நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச விலையின் அடிப்படையில் ஏலம் நடத்தப்படும்.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா புரவலராக இருக்கும் அறவாரியம் ஒன்றில் சேர்க்கப்பட்டு உபகாரச் சம்பளம், நிவாரண உதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.