கோலாலம்பூர், ஆக. 14- எதிர் குழுக்களுக்கிடையே ஆரோக்கியமற்ற மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பினாங்கு, கப்பளா பாத்தாஸ், பெர்த்தாமில் இன்று நடைபெறவிருக்கும் பேரணியை ரத்து செய்யுமாறு அரச மலேசிய போலீஸ் படை அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பு கட்டிக்காக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.
மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கும் சாத்தியம் உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. இதன் தொடர்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கப்பளா பாத்தாஸ், பெர்த்தாமில் நடைபெறும் பேரணியும் அதன் கவனத்திற்கு வந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 38 புகார்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஜாலூர் ஜெமிலாங் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தியதாக முகமது காலிட் கூறினார்.
அவற்றில் 17 புகார்கள் பினாங்கிலும், 21 புகார்கள் பிற மாநிலங்களிலும் பெறப்பட்டன.
1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் அச்சம்பவத்தை பதிவுசெய்து பரப்பிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் விசாரணையில் அடங்கும் என்று அவர் கூறினார்.
விசாரணை ஆவணங்கள் கடந்த திங்கட்கிழமை பினாங்கு அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வெளிப்படையான, நேர்மையான மற்றும் சட்ட விதிகளின்படி விசாரணைகளை மேற்கொள்வதற்கு காவல்துறை எப்போதும் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்
விசாரணையை பாதிக்கக்கூடிய எந்தவொரு ஊகத்தையும் வெளியிடுவதைத் தவிர்த்து காவல்துறைக்கு உண்மையான தகவல்களை தொடர்ந்து வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.


