கோலாலம்பூர், ஆக. 14 - காஜாங் நகரில் உள்ள ஒரு பேரங்காடிக்கு அருகில் சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதியதோடு பொதுமக்களையும் தாக்கியதாக நம்பப்படும் ஒரு வெளிநாட்டுப் பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு காலை 11.58 மணிக்கு தகவல் கிடைத்ததாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய அந்த 24 வயது பெண் வாகனத்தை விட்டு இறங்கி பொதுமக்களை கத்தியால் தாக்கியது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண் இரண்டு கத்திகளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பின்னர் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் 21 முதல் 60 வயதுடைய ஆறு நபர்கள் காயமடைந்ததாகக் கூறிய அவர், அவர்களில் இருவர் தொடர் பரிசோதனைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் மற்ற நான்கு பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர் என்றார்.
அப்பெண்ணின் வாகனம் மோதியதில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாகவும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 307 வது பிரிவு, தண்டனைச் சட்டத்தின் 279வது பிரிவு மற்றும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவு ஆகியவற்றின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக நஸ்ரோன் தெரிவித்தார்.
முன்னதாக, தாக்குதல் இந்த சம்பவத்தை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதிய பெண் காரோட்டி பொதுமக்களை கத்தியால் தாக்கினார்
14 ஆகஸ்ட் 2025, 4:42 AM