கோத்த பாரு, ஆக. 14 - துரத்திய மாடுகளிடமிருந்து தப்ப முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஏழு வயதுச் சிறுவன் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம், இங்குள்ள மச்சாங், கம்போங் கெலாவேயில் உள்ள காஃபா ஆற்றில் நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 4.22 மணிக்கு தமது துறைக்கு அழைப்பு வந்ததாக மச்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு தலைவர் மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமது ஒஸ்மான் கூறினார்.
அந்த ஏழு வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது, தீயணைப்பு குழுவினர் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அச்சிறுவனின் உடல் மாலை 5.07 மணிக்கு சம்பவ இடத்திலிருந்து சுமார் 0.5 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அச்சிறுவன் இறந்துவிட்டதை சுகாதார அமைச்சக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். அவனது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நான்கு உடன்பிறந்தவர்களில் இரண்டாவது மகனான அச்சிறுவன் மூன்று நண்பர்களுடன் கவண் விளையாடிக் கொண்டிருந்தபோது காட்டு மாடுகளின் கூட்டத்தால் துரத்தப்பட்டுள்ளான். தப்பியோட முயன்றபோது தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றில் அச்சிறுவன் விழுந்துள்ளான் என அவர் கூறினார்.
உடனிருந்த மூன்று நண்பர்கள் ஆற்றங்கரையில் உள்ள புதரில் இறுக அணைத்துக் கொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக முகமது தெரிவித்தார்.


