கிள்ளான், ஆக. 13 - மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்விக்கூடங்களில் குறிப்பாக தங்கும் விடுதி வசதி கொண்ட பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் மீது மாநில அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று மந்திரி புசார் கூறினார்.
இத்தகையச் சம்பவங்கள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு உயிரைப் பறிக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளதால் இவ்விவகாரத்தில் அரசு ஒருபோதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது என்ற டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
நாம் இத்தகைய பகடிவதைகளை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் எந்த சமசரமும் இன்றி துடைத்தொழிக்கப்பட வேண்டும். இது போன்ற பகடிவதை சம்பவங்கள் எங்கு நிகழ்கின்றன என்று கவனிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் உறைவிடப்பள்ளிகளில் நிகழ்கின்றன என்று அவர் கூறினார்.
மாநில அரசினால் நடத்தப்படும் இஸ்லாமிய சமய இலாகாவின் கீழுள்ள பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக உள்ளன என்றார் அவர்.
காயங்கள் மற்றும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் இத்தகைய சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இன்று மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு 2025ஆம் ஆண்டிற்கான மானியம் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் 873 பள்ளிகளுக்கு 2 கோடியே 66 லட்சத்து 24ஆயிரம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.