கோலாலம்பூர், ஆக. 13 - கடந்த 2020 முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 4,194 திவால் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை மலேசிய திவால் துறையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த எண்ணிக்கை நாட்டிலுள்ள 16 லட்சம் அரசு ஊழியர்களில் சுமார் 0.3 விழுக்காடாகும்.
கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு உதவும் நோக்கில் கடன் ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனம் (ஏ.கே.பி.கே.) மூலம் அரசாங்கம் ஆலோசனை சேவை, நிதி மேலாண்மை உதவி மற்றும் நிதி மறுசீரமைப்பு திட்டங்களை வழங்குகிறது என்று துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.
புதிதாகச் சேரும் அதிகாரிகளுக்கு பொது சேவைத் துறை மன உருமாற்றத் திட்டத்தை அமல்படுத்துகிறது. இது கடனை விவேகத்துடன் நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கான தனிப்பட்ட நிதி மேலாண்மைக்கு தொடக்க விழிப்புணர்வை வழங்குகிறது.
மேலும், அரசு ஊழியர்கள் கடுமையான கடன் பிரச்சினையில் சிக்குவதைத் தடுக்க அவர்களின் மாதாந்திர நிகர சம்பளம் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது என்ற விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
அரசு ஊழியர்களிடையே வீட்டுக் கடன் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் போக்கிற்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கோல கிராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த வீட்டுக் கடன் 1.65 டிரில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 84.3 விழுக்காடாகும் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அதே காலகட்டத்தில் வீட்டு நிதி சொத்துக்கள் 3.45 டிரில்லியன் வெள்ளியாக இருந்ததால் இது மேக்ரோ வாரியாக கட்டுப்பாட்டில் உள்ளது. இது கடனை விட 2.1 மடங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
2020 முதல் 4,194 அரசு ஊழியர்கள் திவால்- நிதியமைச்சு தகவல்
13 ஆகஸ்ட் 2025, 6:44 AM


