ஷா ஆலம், ஆக. 13 - சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 56 இடங்களில் ஒன்பது இடங்கள் மட்டுமே தற்போது மகளிர் பிரதிநிதிகளால் நிரப்பப்பட்டுள்ளன. இது 30 சதவீத பிரதிநிதித்துவ இலக்கை விட குறைவாகும் என்று மகளிர் ஆக்கத்திறன் மற்றும் சமூகநலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் தேர்வுகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யத் தவறினால் பினாங்கு மாநிலத்தைப் போல் பெண்களுக்கு மட்டும் டாப்-அப் கூடுதல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு அவர் பரிந்துரைத்தார்.
இதை செயல்படுத்த முடியுமா? மற்றும் எண்ணிக்கையில் மட்டுமல்லாது ஜனநாயகத்தை வலுப்படுத்த பங்கேற்பின் தரத்திலும் பெண்களின் குரல்களை அதிகரிப்பது பொருத்தமானதா? என்பதை உறுதி செய்ய இந்த பரிந்துரை விவாதத்திற்குரியது என்று அவர் சொன்னார்.
கட்சி நியமனங்கள் மூலம் 30 விழுக்காடு இலக்கை அடைய முடியாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் பெண்கள், குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளின் குரல்கள் இன்னும் கேட்கப்படுவதை உறுதிசெய்ய கூடுதல் இடங்களை உறுதி செய்வதற்கான வழிமுறை தேவை என்று அன்பால் கூறினார்.
அரசியல் கட்சிகள் மிகக் குறைவான பெண் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. மேலும் குறைவான வேட்பாளர்களே வெற்றி பெறுகின்றனர். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பத்து இடங்களில் போட்டியிடும் ஒரு கட்சி மூன்று பெண்களை மட்டுமே நிறுத்தி அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றால் அது சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவக் குரல்களைக் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் இதற்கு கட்சி விதி மாற்றங்கள் மட்டுமல்லாமல் அரசியல் விருப்பமும் தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சிறப்புத் தொகுதிகள் - மாநில அரசு பரிசீலனை
13 ஆகஸ்ட் 2025, 4:33 AM