புத்ராஜெயா, ஆக. 13 - அதிக மாணவர்கள் எண்ணிக்கை பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்காக ஷா ஆலம், கோத்தா கெமுனிங்கில் உள்ள தேசிய இடைநிலைப் பள்ளிக்கு அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரைவில் வருகை தரவுள்ளார்.
அடுத்த வாரம் அல்லது இந்த மாத இறுதியில் தாம் அப்பள்ளிக்கு வருகை தரவுள்ளதாக ஷம்சுல் கூறினார்.
நான் கல்வி தலைமை இயக்குநர் (டாக்டர் முகமது அசாம் அகமது) மற்றும் தலைமைச் செயலாளர் (டத்தோ டாக்டர் அமினுடின் ஹாசிம்) ஆகியோரை அழைத்து வருவேன் என்று அவர் நேற்று இங்கு தெரிவித்தார்.
'அரசாங்க தலைமைச் செயலாளருடன் பொதுச் சேவை சீர்திருத்தத்தின் ஓராண்டு' எனும் நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட "சீர்திருத்தம் அத்தியாவசியம்" என்ற தலைப்பிலான அமர்வின் போது ஒரு பொதுச் சேவை ஊழியர் எழுப்பிய ஒரு பிரச்சனையைத் தொடர்ந்து இந்த வருகை மேற்கொள்ளப்படுகிறது.
தனது மகனின் பள்ளியில் சராசரியாக 45 முதல் 47 மாணவர்கள் வரை ஒரு வகுப்பறையில் உள்ளது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு பணிச்சுமை காரணமாக ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.


