புனோம் பென், ஆக. 12 - அண்மையில் ஏற்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து தாய்லாந்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள 18 வீரர்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கம்போடிய பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி போர்நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது முதல் அந்த வீரர்கள் பாதுகாப்பாக திரும்புவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் அவர்களது குடும்பங்களின் ஆழ்ந்த கவலையை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் மாலி சோச்சியாட்டா வெளிப்படுத்தினார்.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 வீரர்களை ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு தங்களிடம்
ஒப்படைக்குமாறு கம்போடியா, தாய்லாந்து தரப்பை
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
போர் நிறுத்தம் அமலபடுத்தப்பட்டு 14 நாட்கள் ஆகின்றன. அவர்களது குடும்பத்தினர் இரவும் பகலும் காத்திருக்கின்றனர். வீரர்கள் விரைவில் திரும்பி வந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று இன்று செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
கடந்த மே 28ஆம் தேதி வெடித்த எல்லை சர்ச்சைக்குப் பிறகு பதற்ற நிலை பல வாரங்களாக அதிகரித்து ஜூலை 24 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய இராணுவ மோதல் தொடங்கியது.
சுமார் 120 மணி நேரம் நீடித்த ஆயுத மோதலால் அரச தந்திர உறவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எல்லைகள் மூடப்பட்டன. மேலும், எல்லை தாண்டிய வர்த்தகமும் ஸ்தம்பித்தது. இதனால் 170,000 க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் இடம்பெயர்ந்தனர்.
ஆசியான் அமைப்பின் தலைவராக மலேசியா சமரச முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதரவுடன் ஒரு போர்நிறுத்தம் அமல் செய்யப்பட்டு இராணுவப் பகைமை முடிவுக்கு வந்தது.
பிடிபட்ட வீரர்களை தாய்லாந்து விரைவில் விடுவிக்கும்- கம்போடியா நம்பிக்கை
12 ஆகஸ்ட் 2025, 9:53 AM


