பத்துமலை ஆக 11 ;- பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட்டில் வாழும் இந்தியர்களுக்கு உதவும் மந்திரி புசார் முயற்சியையும் முன்னெடுக்கும் மேம்பாட்டு திட்டங்களையும் ஒரு சில சுயநலவாதிகளின் குளறுபடிகளால் தடைபடுவதா? இதை அனுமதிக்கலாமா என்று பத்துமலை இந்திய குடியிருப்பாளர்கள் குமுறல்.

பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட்டில் வாழும் இந்தியர்களுக்கு உதவ அரசாங்கமும், மந்திரி புசாரும் வகுத்த மேம்பாட்டு திட்டத்திற்கு ஒரு சில சுயநலவாதிகளின் குளறுபடிகளால் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான நில மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பல லட்சம் வெள்ளிகளை இழப்பதுடன் பெரிய மன வேதனையில் இருப்பதாக கூறுகின்றனர்.
பத்துமலை இந்தியர் கிராம மேம்பாட்டுத் திட்டம் 2008ம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சியைப் பக்காத்தான் கைப்பற்றியது முதல் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2008 ம் ஆண்டுக்கு முன் இருந்தவர்கள் சிலாங்கூரில் பூஜ்யம் குடிசைகள் திட்டத்தை பயன்படுத்திக் கிராமத்து நிலங்களை கையகப்படுத்தி மேம்பாட்டாளர்கள் வழி அடுக்கு மாடி மற்றும் தொடர் வீடு திட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இதனால் கிராமத்து நில அளவு சுருங்கி விட்டதுடன் கிராமத்துக்கான சாலைகள் மற்றும் வடிகால்கள் அடைபட்டு போனது. இது போக்குவரத்து மற்றும் வெள்ளம் மற்றும் கழிவு நீரோட்டம் தடைபடுவது போன்ற பல அசௌகரியங்களை அங்கு வாழும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அவரின் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்தியர் செட்டில்மெண்ட் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண, மேற்கொண்ட பல முயற்சிகள் வழி, இங்கு வாழ்பவர்களுக்கு குறிப்பாக நிலப் பட்டா கொண்டு உள்ளவர்களுக்கு பல அனுகூலங்கள் கிட்டியுள்ளது.

1) பழைய நில பட்டாக்கள் ஏறக்குறைய 2040 ம் ஆண்டுக்குள் காலாவதியாகும் நிலையில் இருந்தன. அவைகள் புதுப்பிக்கப் பட்டு, இப்பொழுது 99 ஆண்டுகளுக்கு உரிமம் நீடிக்கப்பட்டுள்ளது.
2) ஆற்று ஓரங்களிலும், மற்றவர்கள் நிலத்திலும் வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்த குடிசைவாசிகளுக்கு பத்து ஆராங்கில் மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ளது.
3) இப்பொழுது உள்ள நிலத்தை அளவு செய்து முறையாக அதற்கான பட்டா வழங்கியும் விட்டார்.
4)பெரும்பாலான நில உரிமையாளர்கள் நிலத்திற்கான பிரீமியத் தொகையை கட்டி பட்டாவை எடுத்து விட்டனர்.
5) எவரும் நில உரிமையை இழக்காமலிருக்க, ஏழைகள் மற்றும் வசதி குறைவாக இருப்பவர்கள் வெறும் 1000 வெள்ளி மட்டும் செலுத்தி நிலப் பட்டா பெறும் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

6) இப்பொழுது அந்தக் கிராமத்தில் சாலைகள், கால்வாய், மற்றும் அனைத்துப் பொது வசதிகளை வழங்குவதற்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.
7) அங்குள்ள தாழ்வான பகுதிகளை மேம்படுத்தி வெள்ள அபாயத்திலிருந்து அந்த மக்களை மீட்கும் முயற்சியிலும் மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி இறங்கியுள்ளார்.
ஆனால், இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் ஈடேற அங்கு வாழும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். அங்குச் சாலை, வடிகால் மற்றும் நிலச் சர்வே படி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு வெளியில் வீடுகளைக் கொண்டிருப்பவர்கள் அந்த வீடுகளைப் பிரித்து எடுத்து அனைத்தையும் வழங்கப்பட்ட உத்தேச வரைபடத்தில் உள்ள படி மீண்டும் கட்ட உதவ வேண்டும்.
அப்படிப்பட்ட திட்டத்திற்கு சுமார் 70 விழுக்காட்டினர் ஒத்துழைப்பு வழங்கி வரும் வேளையில், அரசாங்கமும் இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன் வைத்துள்ள இந்த திட்டங்களுக்கு எதிராக ,இந்த மேம்பாடுகளை தடுக்க, சுய மற்றும் அரசியல் லாபத்துக்காக இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

அப்படிப்பட்டவர்கள் ஏற்படுத்தும் கால தாமதங்கள், மேம்பாட்டுக்கு இடமளிக்க ஏற்கனவே வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியில் வாடகைக்கு இருப்பவர்கள், நிலப் பட்டா இருந்தும் நில மேம்பாட்டு கட்டமைப்புகளுக்கு இணங்கி வீடுகளைக் கட்டக் காத்திருப்பவர்கள், மற்றும் சரியான படி நிலத்தை அளந்து அரசாங்க அனுமதியுடன் வீடுகளைக் கட்டிக் கொண்டவர்கள் கூட முறையான சாலை மற்றும் வடிகால் அமைப்புகள் கொண்ட முறையான வீடமைப்பாக இந்தியன் செட்டில்மெண்ட் மறுமலர்ச்சிப் பெற காத்திருக்கின்றனர்.



