சிரம்பான், ஆக. 12 - ஆடவர் ஒருவரால் 28 வயது நபர் ஒருவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இங்குள்ள செனாவாங், தாமான் ஸ்ரீ பாகியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று மாலை 6.50 மணியளவில் நிகழ்ந்தது.
கொலை செய்யப்பட்ட ஆடவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஹத்தா சே டின் தெரிவித்தார்.
சந்தேக நபர் அந்த இளைஞரின் மார்பில் கத்தியால் குத்தி மரணத்தை ஏற்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் இரவு 7.28 மணியளவில் உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் 31 வயது சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக முகமது ஹத்தா தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபர் இன்று முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் தந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாம் வெளியே ஓடி வந்ததாக அந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் 66 வயதுடைய அண்டை வீட்டுக்காரர் கூறினார்.
தாக்கப்பட்ட இளைஞர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தேன். அண்டை வீட்டாரும் வெளியே வந்தனர். சந்தேக நபர் ஓடிவிடக்கூடாது என்பதற்காக நானும் சக குடியிருப்பாளர்களும் கயிற்றால் கட்ட உதவினோம் என்று அவர் தெரிவித்தார்.


