கோலாலம்பூர், ஆக. 12 - கடந்த 11 ஆண்டுகளில் நாட்டிலுள்ள எட்டு அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் 31 பகடிவதைச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில் அனைத்துச் சம்பவங்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 முதல் 2025 வரை பதிவானச் சம்பவங்களில் உடல் ரீதியான மற்றும் இணைய வழி பகடிவதைகளும் அடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ சம்ரி அப்துல் காடீர் கூறினார்.
சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள், உயர்கல்விக்கூட வளாக சூழல், சமூக ஊடக ஆதிக்கம், பெற்றோர்களின் கண்காணிப்பு போதுமான அளவு இல்லாதது ஆகியவை இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
பகடிவதையில் சம்பந்தப்படும் மாணவர்களுக்கு எதிராக கடந்த 2024ஆம் ஆண்டு ஒருமுகப்படுத்தப்பட்ட மாணவர் கட்டொழுங்கு விதிதுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டனைகளில் எச்சரிக்கை வழங்குதல், சமூகச் சேவை, அபராதம், இடை நீக்கம் அல்லது வெளியேற்றம் ஆகியவையும் அடங்கும் என்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.
தனியார் உயர்கல்விக் கூடங்களைப் பொறுத்த வரை மாணவர்களின் நலன் மற்றும் கட்டொழுங்கை உறுதி செய்யும் பொறுப்பு 1996ஆம் ஆண்டு
தனியார் உயர்கல்விக்கூடச் சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் அந்த கல்விக்கூடங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சம்ரி குறிப்பிட்டார்.
தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்வுகள், பகடிவதை எதிர்ப்பு பிரசாரங்கள், கணிகாணிப்பு கேமராக்களை பொருத்துவது, புகார் முறையை மேம்படுத்துவது ஆகிய முன்னெடுப்புகள் அமல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
பகடிவதை விவகாரத்தில் சமரசப் போக்கு அறவே இல்லாத கொள்கையை கல்வியமைச்சு கடைபிடிப்பதோடு அதன் தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகள் வாயிலாக முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது என அவர் சொன்னார்.