ஷா ஆலம், ஆகஸ்ட் 12 - இன்று தொடங்கி 3ஆம் கட்ட ரஹ்மா உதவி தொகை நாடு முழுவதும் 8.6 மில்லியன் பெறுநர்களுக்கு கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும். இதில் RM2 பில்லியன் ஒதுக்கீடும் அடங்கும்.
இந்த முறை குடும்பம், முதியவர்கள் மற்றும் தனித்து வாழ்பவர்கள் என அவர்களின் தகுதிகளைப் பொறுத்து RM650 வரை பண உதவி வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 8.3 மில்லியன் STR கட்டம் 1 பெறுநர்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை பெறுநர்களின் எண்ணிக்கை 300,000 அதிகரித்துள்ளது.
“இந்த அதிகரிப்பு, உண்மையிலேயே தகுதியானவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, ஆண்டு முழுவதும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகளைத் திறக்கும் மடாணி அரசாங்கத்தின் நடவடிக்கையின் பிரதிபலிப்பை காட்டுகிறது,” என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.
நிதி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆண்டு முழுவதும் திறக்கப்படும் விண்ணப்பங்கள், எந்த குடிமகனும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் மடாணி அரசாங்கத்தின் உறுதியை நிரூபிக்கின்றது என்று கூறினார்.
STR தரவுத்தளத்தில் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
STRக்கான தகுதியை சரிபார்த்தல் அல்லது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) https://bantuantunai.hasil.gov.my என்ற இணைப்பில் உள்ள STR அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் நாடலாம்.
பொறுப்பற்ற தரப்பினரால் பரப்பப்படும் STR தொடர்பான போலியான அல்லது நம்பகத்தன்மையற்ற இணைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.