ஷா ஆலம், ஆக. 11 - அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்திற்கும் இடமளிக்கும் மாநில அரசின் முடிவை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வரவேற்றுள்ளார்.
சிலம்பத்தை சுக்மாவில் சேர்க்கும் கோர்க்கைக்கு செவிசாய்த்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி மற்றும் அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் தாம் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பது, எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்வது மற்றும் அவற்றைத் தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதில் மாநில அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வு, உள்ளடக்கிய தன்மை மற்றும் விளையாட்டு உணர்வை மையமாகக் கொண்ட தலைமைத்துவத்திற்கு சிறந்த சான்றாகும் என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
நீண்டகால அடிப்படையில் நன்மைகளை வழங்கும் நோக்கில் சமூகத்தின் கோரிக்கைகளை முழுப் பொறுப்புடனும் மாற்றங்களைச் செய்வதற்கான தைரியத்துடனும் நிறைவேற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநில அரசின் திறனை இந்த முடிவு நிரூபிக்கிறது.
இந்த விவகாரம் விளையாட்டுத்திறன் மற்றும் உயர் விளையாட்டு மதிப்புகளின் தூய உணர்வில் வேரூன்றியுள்ளது என்பதை மாநில அரசு தெளிவாக நிரூபித்துள்ளது. சில தரப்பினர் மிகைப்படுத்த முயற்சிப்பது போல் பிரிவினை அல்லது இன உணர்வை ஏற்படுத்தக்கூடாது.
இதுபோன்ற தலைமைத்துவம் சிலாங்கூர் மாநிலத்தில் விளையாட்டு துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். இதன் மூலம் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில இதர மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிலாங்கூரை
விளங்கச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை நிஜமாக்குவதில் கடப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் வலுவான ஆதரவிற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி மற்றும் அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும்
மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன்.
மேலும் இந்த விஷயத்தை தொழில்முறை ரீதியாகவும் விளையாட்டு உணர்வின் அடிப்படையிலும் தீர்ப்பதில் உதவிய டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
சுக்மா போட்டியில் சிலம்பம் - மாநில அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் நன்றி
11 ஆகஸ்ட் 2025, 9:28 AM