கப்பளா பாத்தாஸ், ஆக.11 - தனது வர்த்தக வளாகத்தின் முன் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்ட ஜாலான் பெர்த்தாம் பெர்டானாவில் உள்ள ஒரு உபகரணக் கடையின் உரிமையாளர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 59 வயது நபர் நேற்று விடுவிக்கப்பட்டதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
தேசியக் கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையையும் தயார் செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.
அந்த கடையின் உரிமையாளர் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போலீசார் இன்று விசாரணை அறிக்கையை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவர்களின் ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மாநிலத்தின் புதிய காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட புக்கிட் அமான் துணை மேலாண்மை இயக்குநர் (நிர்வாகம்) டத்தோ அஸிசி இஸ்மாயிலுக்கும், பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனல் அபிடினுக்கும் இடையிலான பினாங்கு காவல்துறைத் தலைவர் பதவியேற்பு மற்றும் ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
தனது வர்த்தக வளாகத்தின் முன் நேற்று தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ ஜாலான் பெர்த்தாம் பெர்டானாவில் உள்ள ஒரு உபகரணக் கடையின் உரிமையாளரை தாங்கள் கைது செய்ததாகப் போலீசார் முன்னதாகக் கூறியிருந்தனர்.
1963ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும்) சட்டத்தின் 5வது பிரிவு, 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இங்குள்ள ஒரு கடையில் இரண்டு ஆடவர்கள் தேசியக் கொடியை வேண்டுமென்றே தலைகீழாகப் பறக்கவிடும் செயல்களைச் சித்தரிக்கும் 21 வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டச் சம்பவம்- வணிகர் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு
11 ஆகஸ்ட் 2025, 9:08 AM