புத்ராஜெயா, ஆகஸ்ட் 11 - நாளை தொடங்கி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர்-யை விநியோகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மடாணி அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்காக 200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாம் கட்ட எஸ்.டி.ஆர் மூலம் 650 ரிங்கிட் வரை பெற்று சுமார் 86 லட்சம் பேர் பயனடைவார்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட எஸ்.டி.ஆர் மூலம் 83 லட்சம் பேருக்கு உதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 300,000 பேருக்கு எஸ்.டி.ஆர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
தகுதியுள்ள அனைவருக்கும் உதவி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், புதிய விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளை பரிசீலித்த அரசாங்க நடவடிக்கையின் விளைவாக, எஸ்.டி.ஆர் பெறுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
-- பெர்னாமா