ஈப்போ, ஆக. 11 - இங்குள்ள உடம்புப்பிடி நிலையம் ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் வருகை அனுமதியை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக 54 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு தினங்களுக்கு முன்னரே வேலைக்குச் சேர்ந்து கமிஷன் தொகையாக 100 வெள்ளியை பெற்ற தாய்லாந்துப் பெண்ணும் ஒருவராவார். 25 வயதுடைய அப்பெண் மூன்று தினங்களுக்கு முன்னர் பேங்காக்கிலிருந்து நாட்டின் வட எல்லை வழியாக பேருந்து மூலம் நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.
தம்புனில் உள்ள உடம்புபிடி நிலையம் ஒன்றில் பேராக், கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட ஓப் கோகார் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மூன்று தாய்லாந்து பெண்களில் அவரும் ஒருவராவார்.
ஈப்போவைச் சுற்றியுள்ள 13 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் 20 முதல் 54 வயது வரையிலான தாய்லாந்து, இந்தோனேசியா மற்று வியட்னாமைச் சேர்ந்த மொத்தம் 54 பெண்கள் கைது செய்யப்பட்டதாகப் பேராக் மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜேம்ஸ் லீ கூறினார்.
1959/63 குடிநுழைவுச் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உடம்புபிடி நிலையங்களில் நிகழும் ஒழுங்கீனச் செயல்களை துடைத்தொழிக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பின்னர் அதிரடிச் சோதனையை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன் என்று அவர் கூறினார்.
கைதானவர்களில் பலர் சுற்றுப்பயணிகளுக்கான வருகை அட்டையைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறிய அவர், இந்த சோதனை நடவடிக்கையில் 91 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர் என்றார்.


