கோத்தா பாரு, ஆக. 11 - இன்று காலை இங்குள்ள ஜாலான் உத்தாமா, ஃபெல்டா சிக்கு 1இல் நிகழ்ந்த கார் மற்றும் டிரெய்லர் லோரி சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பில் காலை 9.07 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கிளந்தான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காலை 9.34 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்த குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் ஒரு ஹோண்டா கார் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதைக் கண்டனர்.
அந்த காரில் ஐந்து பேர் சிக்கிக் கொண்ட வேளையில்
லோரி ஓட்டுநர் காயமின்றித் தப்பினார் என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் காரின் ஓட்டுநரான ஒரு பெண்மணி ஆபத்தான நிலையில் காணப்பட்டதோடு மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளையில் இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர் கூறினார்.
மூத்த தீயணைப்பு அதிகாரி II நிக் முகமது ஃபக்ரி முகமது நாவி தலைமையில் 10 உறுப்பினர்கள் எப்ஆர்டி இயந்திரங்கள், அவசர சேவை பிரிவு மற்றும் எப்ஆர்வி ட்ரைடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், இந்த விபத்து நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ, பாதிக்கப்பட்ட அனைவரும் குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.