இஸ்ரேலின் கோரத் தாக்குதல்களில் இதுரை 61,369 பேர் பலி, 152,850 பேர் காயம்
அங்காரா, ஆக. 10- கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் இதுவரை குறைந்தது 61,369 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 39 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்ட வேளையில் மேலும் 491 பேர் காயமடைந்தாக அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம் இதுவரை இஸ்ரேலிய தாக்குதல்களால் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 152,850 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மீட்புக் குழுக்களால் அடைய முடியாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் தெருக்களிலும் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் 341 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அமைச்சு கூறியது.
இதன் மூலம் மே 27ஆம் தேதி முதல் 12,590 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உதவி கோரும் போது கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,743 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 சிறார்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 212 பேராக அதிகரித்துள்ளது. இதில் 98 சிறார்களும் அடங்குவர்.
கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியது.
காஸாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகியோருக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.


