புத்ராஜெயா, ஆக 10- மோட்டார் சைக்கிளோட்டிகள் உள்பட அனைத்து வகையான வாகனங்களுக்கான டோல் கட்டணத்தில் தற்போதைக்கு எந்த மாற்றங்களும் இல்லை என்று மோட்டார் சைக்கிளோட்டிகள் உள்பட அனைத்து வகையான வாகனங்களுக்கான டோல் கட்டணத்தில் தற்போதைக்கு எந்த மாற்றங்களும் இல்லை என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அக்டோபர் மாதம் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் டோல் கட்டணம் செலுத்தத் தொடங்குவார்கள் என்ற குற்றச்சாட்டுகளை அந்த வாரியம் மறுத்தது. 'ebidmotor.com' என்ற சமூக ஊடகக் கணக்கின் உரிமையாளரால் நேற்றிரவு இந்த செய்தி வெளியிடப்பட்டது.
இத்தகையச் செய்திகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்பதோடு மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே தேவையற்ற குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்றுஅது அறிக்கை ஒன்றில் கூறியது.
மேலும் அரசாங்கம், பொதுப்பணி அமைச்சு, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களின் நற்பெயருக்கு இத்தகைய அறிக்கை தீங்கு விளைவிக்கும் என்றும் அது விவரித்தது.
பிளஸ் மலேசியா பெர்ஹாட் ஒப்பந்த நிறுவனம் தற்போது தானியங்கி எண் தகடு அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறந்த டோல் கட்டண அமைப்பு முறையை சோதனையை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் தேர்வு வெற்றிகரமாக அமைந்தால் பிளஸ் மலேசியா பெர்ஹாட் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் அத்திட்டம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த முறையை செயல்படுத்துவதன் முக்கிய நோக்கம் போக்குவரத்தை சீராக்குவது, பயனீட்டாளர் வசதியை அதிகரிப்பது மற்றும் டோல் சாவடிகளில் நெரிசலைக் குறைப்பது ஆகும்.
பொதுமக்களை, குறிப்பாக சுங்கச்சாவடி பயனர்களை குழப்பக்கூடிய தவறான, நிந்தனையான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று எல்.எல்.எம். கேட்டுக்கொள்கிறது.


