கங்கார், ஆக 10- வேப் எனப்படும் மின் சிகிரெட்டுகளை தடை செய்வது குறித்த நிபுணர் குழுவின் ஆய்வு முடிந்ததும் அதன் தொடர்பான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்படும் பரிந்துரை மின் சிகிரெட் தடையை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
நாங்கள் இதற்கு (வேப் தடை) உறுதிபூண்டுள்ளோம். இது, "தடை இருக்கும் பட்சத்தில்" என்பது பற்றிய விஷயம் அல்ல. மாறாக, "தடை எப்போது" என்பது பற்றியதுதான். நான் அதை அமைச்சரவையில் விவாதத்திற்காக முன்வைப்பேன் என்று அவர் நேற்று இங்குள்ள டேவான் 2020 இல் சுகாதார விழாவுக்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்ட (சட்டம் 852) அமலாக்கம் ஏற்கனவே நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது. அமலாக்கத்திற்கு முன்பு 6,824 ஆக இருந்த புகை தொடர்பான தயாரிப்பு வகைகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 2,794 ஆகக் குறைந்துள்ளது என்று டாக்டர் ஜூல்கிப்ளி கூறினார்.
அதாவது 40.9 சதவீதம் மட்டுமே மீதமுள்ளது. கடுமையான அமலாக்கத்துடன் சிகரெட் மற்றும் வேப் விற்பனையை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். மிக முக்கியமாக, பெரியவர்கள் அல்லாதவர்கள், மாணவர்கள் மற்றும் நம் பிள்ளைகளை வேப் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
பொது சுகாதாரத்திற்காக வேப் உட்பட அனைத்து புகைபிடிக்கும் பொருட்களையும் ஒழுங்குபடுத்த சட்டம் 852 உறுதியாக அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
வேப் தடை- நிபுணர் குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்
10 ஆகஸ்ட் 2025, 6:32 AM


