ஏழு மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி மரணம்- கிள்ளானில் சம்பவம்
ஷா ஆலம், ஆக. 10- கிள்ளானில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் உலோகக் கட்டமைப்பில் சாயம் பூசிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் ஏழு மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
துணை ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிந்து வந்த பாதிக்கப்பட்ட நபர் நேற்று காலை சுமார் 11.45 மணியளவில் தனது வேலையைச் செய்ய ஏ வகை சாரக்கட்டு தளத்தைப் பயன்படுத்தியபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
பலத்த காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தொடக்கக்கட்ட விசாரணையை மேற்கொள்வதற்காக புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (ஜே.கே.கே.பி.) அறிவித்தது.
அங்கு மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் பாதிக்கப்பட்டவர் ஏழு மீட்டர் உயரத்தில் சாயம் பூசிக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
அந்த ஊழியரின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக கிள்ளான்,
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொருட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட கட்டுமான தளத்தில் உயர்ந்த இடங்களில் உள்ள அனைத்து வேலைகளையும் உடனடியாக நிறுத்துமாறு முதலாளிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு கடிதம் வெளியிட்டப்பட்டுள்ளது.
இந்த அதிக ஆபத்துள்ள வேலைகளை மேற்கொள்ளும்போது பாதுகாப்பான பணி முறையை வழங்க முதலாளி தவறியதால் தடை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
.
சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் அடையாளம் காண 1994ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்
15(1)வது பிரிவின் கீழ் விசாரணைகள் தொடர்கின்றன


