ஷா ஆலம், ஆக. 10- கட்டொழுங்கும் உடலாரோக்கியமும் கொண்ட தலைமுறையின் உருவாக்கத்திற்கு விளையாட்டு பெரிதும் துணை புரியும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
பள்ளிப் பருவம் தொட்டு விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வருவதன் மூலம் ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, போட்டியிடும் ஆற்றல் கொண்ட மற்றும் உயரிய பண்புகள் நிறைந்த சமூகத்தை நாம் உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று பாங்கியில் உள்ள இன்ஸ்பென் அரங்கில் நடைபெற்ற காஜாங் தமிழ்ப்பள்ளியின் 48ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் உடல் ஆற்றலை சோதிக்கும் களமாக மட்டும் விளங்கவில்லை. மாறாக, கட்டொழுங்கு, குழுவாக இணைந்து செயல்படும் உணர்வு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் ஆகியவற்றையும் விதைக்கிறது என்று அவர் சொன்னார்.
இவைதான் தரமான மனுக்குலத்தின் உருவாக்கத்திற்கான அடித்தளமாக விளங்குகிறது. சுபிட்சமான மற்றும் போட்டித் தன்மை நிறைந்த சமுதாயத்தின் உருவாக்கத்திற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஏற்பவும் இது அமைந்துள்ளது எனறார் அவர்.
சுமார் அரை நூற்றாண்டுகளாக இந்த விளையாட்டுப் போட்டியை பள்ளி நிர்வாகம் நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு நான் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்றேன் என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.



