ஒசாகா, ஆகஸ்ட் 9: முதலீட்டு, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜாப்ருல் அப்துல் அஜீஸ் மக்கள் நீதிக் கட்சியில் ( கெஅடிலான் ) சேருவதற்கான தனது விண்ணப்பம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
தெங்கு ஜாப்ருல் இப்போது அம்பாங் கிளையின் கெஅடிலான் உறுப்பினராக இருப்பதாகக் கூறினார். "(விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி) எனக்கு நினைவில் இல்லை, ஆனால் அது இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சியின் மத்திய உச்ச மன்ற (எம். பி. பி) கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது " என்று அவர் நேற்று ஒசாகா எக்ஸ்போ 2025 இல் மலேசிய பெவிலியனுக்கு விஜயம் செய்த போது மலேசிய ஊடகங்களிடம் கூறினார்.
மே 30 அன்று, தெங்கு ஜாப்ருல் அம்னோவில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து, பி. கே. ஆரில் சேர விருப்பம் தெரிவித்தார். அம்னோ தலைமைக்கு எழுதிய கடிதத்தின் மூலம், அவர் அக்கட்சியின் உச்ச மன்ற குழு உறுப்பினர், கோத்தா ராஜா அம்னோ பிரிவின் தலைவர் மற்றும் அம்னோ உறுப்பினர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தார்.


