கோலாலம்பூர், ஆக. 7 - இங்குள்ள அம்பாங் வழித்தடத்தில் உள்ள மஸ்ஜிட் ஜாமேக் இலகு ரயில் (எல்ஆர்டி) தடத்தில்  அத்துமீறி நுழைந்த வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 10.11 மணிக்கு அவ்வாடவர்  இரண்டாவது பிளாட்ஃபாரத்திலிருந்து முதலாவது பிளாட்ஃபாரத்திற்கு தண்டவாளம் வழியாகச் செல்வது  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் (ஐ.சி.சி.) மூலம்  கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து  20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பெண்டி சுலைமான் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவலைப் பெற்ற பிரசரானா நிறுவனத்தின் துணை காவல் அதிகாரியான புகார்தாரர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தார்.  
பின்னர் மேல் நடவடிக்கைக்காக அவ்வாடவர் டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் வேலைக்கு செல்வதற்காகக் குறுக்குவழியில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்ததை ஒப்புக்கொண்டதாகவும் சுலிஸ்மி கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின்  447 வது பிரிவு மற்றும் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின்  6(1)(c) பிரிவின்  கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்  117வது பிரிவின் கீழ் அவ்வாடவரை  விசாரணைக்காகக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம்  இன்று செய்யப்படும் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சட்டத்தை மீறவோ அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையவோ கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இத்தகைய சட்ட மீறல்கள் குறித்த தகவலை கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தின்  03-21460522 என்ற ஹாட்லைன் அல்லது டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தின் 03-26002222 என்ற ஹாட்லைன்  அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.




