கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - உடற்பயிற்சியில் இரு உலக சாதனை, இரு தேசிய சாதனை, ஓர் ஆசிய சாதனையை படைத்துள்ளார் ஜெய் பிரபாகரன் குணசேகரன். தற்போது தனது 28வது வயதிலே மூன்றாவது உலக சாதனையைப் படைக்கும் இலக்கில் களமிறங்கியுள்ளார்.
பகாங், கோலா லிப்பிசைச் சேர்ந்த இந்த இளைஞர், உடற்பயிற்சியில் தம்மை முழு நேரமாக ஈடுப்படுத்தி வருகிறார். இந்நிலையில் உலக சாதனையுடன் எதிர்வரும் தலைமுறைக்கு உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் சங்கம் ஒன்றையும் நிறுவும் முயற்சியை கையில் எடுத்திருக்கின்றார்.
2023-ஆம் ஆண்டில் 12 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து உலக அளவில் சாதனைப் படைத்த பின்னர், அதற்கு அடுத்த ஆண்டே அச்சாதனையை முறியடிக்கும் வகையில் 15 மணிநேர உடற்பயிற்சியை ஜெய் பிரபாகரன் செய்திருந்தார்.
"அடுத்தபடியாக இடைவிடாது 18 மணிநேரம் உடற்பயிற்சி செய்து என் சொந்த சாதனையை மீண்டும் முறியடிக்கவிருக்கிறேன். ஒவ்வோரு ஆண்டும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் நான் குறிக்கோளாக உள்ளேன். என்னைப் பார்த்து இன்னும் அதிகமானோர் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதும் எனது இலட்சியம்," என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு, பகாங் மாநில அளவிலான தேசிய விளையாட்டு தினம் கோலா லிப்பிசில் நடைபெறவிருப்பதால் அத்தினத்தன்று 250 இளைஞர்களைக் கொண்டு ஒரு தேசிய சாதனையையும் படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜெய் பிரபாகரன் கூறினார்.
உடற்பயிற்சிக்கான அவசியம் மற்றும் அதில் அதிகமானோரை குறிப்பாக இளைஞர்களை இணைக்கும் விதமாக அரசாங்கத்துடன் இணைந்து MYFIT என்ற புதிய சங்கத்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உடற்பயிற்சி செய்வதற்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த இருபாலாரும் விருப்பம் கொண்டிருந்தாலும், முறையான பயிற்சியாளர்கள் இல்லாமல் சில சமயங்களில் பாதியிலே தங்களின் எண்ணத்தை கைவிட்டு விடுகின்றனர்.
எனவே, இத்தகைய சங்கம் தொடங்கி நாடு முழுவதும் கிளைகள் அமைத்து முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு வழிநடத்தினால் இன்னும் அதிகமானவர்கள் இதில் இணைவார்கள் என்று ஜெய் பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆதரவு வழங்கி இருப்பதாக தெரிவித்த ஜெய் பிரபாகரன், அனைத்தும் முறையாக கைக்கூடினால் இவ்வாண்டு இறுதியில் அதை அதிகாரப்பூர்வமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெர்னாமா