கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் உறுதிபடுத்தபடாத தகவல்களை பதிவேற்றம் செய்வது அல்லது பகிர்வதை நிறுத்துமாறு அரச மலேசிய காவல்துறை படை (பி.டி.ஆர்.எம்) பொதுமக்களுக்கு வலியுறுத்தியது.
இந்த வழக்கு தொடர்பான தகவல்களையும் படங்களையும் சில பொறுப்பற்ற தரப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்வதை தமது தரப்பு கண்டறிந்துள்ளதாக தேசிய காவல்துறை படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
சமூக ஊடக தளத்தில் பகிரப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருக்கும் பட்சத்தில் அது விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
பிரேதப் பரிசோதனை உட்பட வழக்கு தொடர்பான அனைத்து விசாரணை செயல்முறைகளும் நடைமுறையில் உள்ள சட்டத்தைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உறுதியற்ற தகவல்களைப் பதிவேற்றம் செய்வது, பகிர்வது அல்லது விசாரணை தொடர்பான செய்திகளை வெளியிடுவது போன்ற செயல்களை நிறுத்துமாறு டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஜூலை 17 அன்று சபா, கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் I மருத்துவமனையில் 13 வயதான சாரா கைரினாவின் இறப்பு உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 16, அதிகாலை 4 மணியளவில் பாப்பரில் உள்ள ஒரு மதப் பள்ளியின் தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் அம்மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை அரச மலேசிய காவல்துறை படையினால் நடத்தப்பட்டு வருகிறது.