புத்ராஜெயா, ஆக. 7- கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தின் முதலாவது முனையம் வழியாக சுமார் 348,000 வெள்ளி மதிப்புள்ள 2,500க்கும் மேற்பட்ட ஆமைகளை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் ஒரு இந்திய பிரஜை கைது செய்யப்பட்டார்.
இரவு 10.05 மணியளவில் இந்தியாவின் பெங்களூருக்கு விமானத்தில் செல்லவிருந்த அந்த சந்தேக நபரின் பயணப்பெட்டியை புறப்படும் வாயிலில் ஸ்கேன் செய்தபோது சந்தேகத்திற்கிடமான பொருள் அதில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அவரின் பயணப்பெட்டியை ஆய்வு செய்த போது அதன் உடற்பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து ஆமைகளும் மேல் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு 2010ஆம் ஆண்டு
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2008ஆம் ஆண்டு அழிந்து வரும் உயிரினங்கள் மீதான சர்வதேச வர்த்தகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
2,500 ஆமைகளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற ஆடவர் கைது
7 ஆகஸ்ட் 2025, 9:23 AM