மச்சாங், ஆக. 7 - கனமானப் பொருளைக் கொண்டு தன் தந்தையைத் தாக்கி கொன்றதாக சந்தேகிக்கப்படும் 39 வயது நபர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். இச்சம்பவம், கோல கிராய், டாபோங்கில் உள்ள கம்போங் பாரு கோல கிரிஸில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு நிகழ்ந்தது.
தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அந்த ஆடவரை எதிர்வரும் ஆகஸ்டு 13 ஆம் தேதி தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் அமால் ரஸிம் அலியாஸ் அனுமதி வழங்கினார்.
முன்னதாக, ஊதா நிற லோக்கப் உடையுடன் சந்தேக நபர் காலை 9.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
முதியவரான ஓத்மான் ஜூசோ (வயது 74) நேற்றிரவு தனது வீட்டின் சமையலறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும் கனமானப் பொருளால் தாக்கப்பட்டதற்கான அறிகுறியாக தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், விசாரணையில் அவர் கோல கிராய், பத்து ஜோங் சாட்டிலைட் சிறைச்சாலையின் முன்னாள் குற்றவாளி என்பதும் போதைப்பொருள் குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஜூலை தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.