ஷா ஆலம், ஆக. 7- இங்குள்ள ஷா ஆலம் நெடுஞ்சாலையில் (கெசாஸ்) நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையின் போது வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாத காரணத்தினால் பிடிபட்ட பெரும்பாலான வாகனமோட்டிகள் ‘நேரமில்லை‘ அல்லது ‘மறந்து விட்டேன்‘ என்ற காரணங்களைக் கூறியுள்ளனர்.
நேற்றிவு 8.30 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த ஐந்து மணி நேர சோதனை நடவடிக்கையில் மொத்தம் 580 வாகனங்கள் சோதனையிடப்பட்டு 252 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.
வானமோட்டும் லைசென்ஸ் இல்லாதது தொடர்பில் 76 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் லைசென்ஸ் காலாவதியானது (51), காப்புறுதி இல்லாதது (49) ஜி.டி.எல். லைசென்ஸ் இல்லாதது (8), பிரதிபலிப்பு கண்ணாடி இல்லாதது (5), தொழில்நுட்ப தவறுகள் (10) ஆகிய குற்றங்கள் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது அதிகப் பட்சம் ஈராண்டுகள் வரை வானமோட்டும் லைசென்ஸ் புதுப்பிக்காதவர்களை அடையாளம் கண்டோம். அவர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிளோட்டிகளாவர் என்று இச்சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்ளிடம் அவர் தெரிவித்தார்.
கெமுனிங் டோல் சாவடியின் ஷா ஆலம் நோக்கிச் செல்லும வழி மற்றும் மோட்டார் சைக்கிள் தடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சோதனை நடவடிக்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் எதிர்திசையில் பயணிப்பது போன்ற எந்த அசம்பாவிதமும் இன்றி சமூகமாக நடைபெற்றது என்றார் அவர்.
இந்த சோதனையின் போது எட்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கார்கள் உள்ளிட்ட எட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.


