கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 - தற்போது மலேசியாவில் நடுத்தர அல்லது குறைந்த திறன்கள் கொண்டவர்களின் வேலைகளை நிரம்பும் கற்றவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன் விகிதம், 2022-ஆம் ஆண்டு 37.3 விழுக்காட்டிலிருந்து 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 35.7 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக மனிதவள துணை அமைச்சர், டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார்.
"இந்த சரிவு பல்வேறு அமைச்சுகள் மூலம் அரசாங்கம் மேற்கொண்ட விரிவான அணுகுமுறையின் விளைவாகும்," என்றார் அவர்.
இன்று மக்களவையில், பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர், முஹ்மட் மிஷ்பாஹ்புல் முனிர் மஸ்டுகி எழுப்பிய கேள்விக்கு, அப்துல் ரஹ்மான் இவ்வாறு பதிலளித்தார்.
திறன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள Talent Corp, மனிதவளத் துறை, திறன் மேம்பாட்டுத் துறை, பெர்கேசோ மற்றும் HRD Corp போன்ற துறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மனிதவள அமைச்சு, தற்போதைய தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப உயர் திறன்களைக் கொண்ட பணியாளர்களை வழங்குவதில் பங்கு வகிக்கின்றன.
மேலும், 2024ஆம் ஆண்டில் JTM திட்டங்களின் கீழ் 84,231 பேர் பயிற்சி பெற்றதாகவும், ஜூன் 30 நிலவரப்படி 48,833 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் ரஹ்மான் கூறினார்.
--பெர்னாமா


