கோலாலம்பூர், ஆக. 6 - கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த உதவித் தொகை நிறுத்தத்திற்கு பின்னரும் கோழியின் விலை சந்தையில் நிலையானதாக இருப்பதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
மானியம் முடிவதற்கு முன்பு அரசாங்கம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மற்றும் மானிய விலையையும் நிர்ணயித்திருந்த போதிலும் கோழிச் சந்தை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புஸியா சாலே கூறினார்.
நாங்கள் செயல்படுத்திய உத்திகளில் கோழி தீவன ஆதிக்கக் கும்பலை ஒடுக்குவதும் அடங்கும். ஏனெனில் கோழி உற்பத்திக்கு உண்டாகும் செலவில் 70 சதவீதம் கோழி தீவனத்திற்கு சென்றுவிடுகிறது. ஆகவே, கோழி உற்பத்தியாளர்களின் செலவுகளை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023 நவம்பர் 1ஆம் தேதி முதல் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கோழி விலை தொடர்பான தரவுகளை ஒவ்வொரு நாளும் சேகரிக்கத் தொடங்கியது.
இந்நடவடிக்கை உண்மையிலேயே பயனுள்ளதாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மானியம் எதுவும் இல்லை. ஆனால், நாங்கள் முழு தொடர்புச் சங்கிலியையும் கட்டுப்படுத்தி கோழி விலையைச் சரிபார்க்கிறோம். இன்று வரை கோழி விலை நிலையானதாகவும் சில இடங்களில் குறைவாகவும் உள்ளது என்று அவர் மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது கூறினார்.
வாழ்க்கைச் செலவின இடையீட்டு நடவடிக்கைகள் பயனீட்டாளர்கள் மீதும் அவற்றின் செயல்திறன் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கிலான தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கை மன்றத்தின் (NACCOL) அறிக்கையிடல் மற்றும் கண்காணிப்பு வழிமுறையின் ஆக்கத் தன்மை குறித்து சுங்கை பட்டாணி ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி எழுப்பிய கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.


