கோலாலம்பூர், ஆக. 6 - இங்குள்ள ஜாலான் புக்கிட் துங்குவில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடும் கும்பலின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் ஆடவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
முப்பத்தாறு வயதுடைய அந்த சந்தேக நபருக்கு போதைப்பொருள் உள்பட 44 முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.
மேலும், கடந்தாண்டு முதல் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பேராக்கில் திருட்டு மற்றும் வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அந்நபர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று அதிகாலை 4.10 மணிக்கு கே.எல்.3/2025 ஓப் ஆப்பி நடவடிக்கையின் ஒரு பகுதியாக குற்றத் தடுப்புப் சோதனைகளை மேற்கொண்டிருந்த புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை உறுப்பினர்கள் சந்தேக நபர் சம்பவம் நடந்த இடத்தில் பி.எம்.டபள்யூ. ரக காரில் ஏறுவதைக் கண்டனர்.
அந்த வாகனத்தை போலீசார் மடக்க முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இதன் விளைவாக சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸ் வாகனத்திலும் பல துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன என்று அவர் இன்று சம்பவம் நடந்த இடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சந்தேக நபரின் வாகனத்தை சோதனை செய்தபோது ரிவால்வர் வகை கைத்துப்பாக்கி, கொள்ளை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல உபகரணங்கள் மற்றும் ஒரு போலீஸ் அங்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பி.எம்.டபள்யூ. வாகனம் போலி பதிவு எண்ணைக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், அது வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு பெட்டகங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் பணம் இருக்கும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை குறிவைத்து அக்கும்பல் கொள்ளையிட்டு வந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளைப் போல அவர்கள் ஆள்மாறாட்டமும் செய்ததாக நம்பப்படுகிறது என அவர் கூறினார்.
போதைப்பொருள் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் இக்கும்பல் டஜன் கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
போலீஸ் அதிரடி - கொள்ளைக் கும்பலின் முக்கியப் புள்ளி பலி
6 ஆகஸ்ட் 2025, 5:13 AM