ஷா ஆலம், ஆக. 6 - அவசரகால முதலுதவியை வலுப்படுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும் புதிய கட்டிடங்களில் டெபிபிரிலேட்டர் எனப்படும் தானியங்கி வெளிப்புற அதிர்வுப் பெட்டிகள் (ஏ.இ.டி.) பொருத்தப்படுவதை கட்டாயமாக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மாநில அரசு இறுதி செய்து வருவதாகவும் இத்திட்டம் திறம்பட செயல் படுத்தப்படுவதை உறுதி செய்ய ஊராட்சி மன்றங்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதும் இதில் அடங்கும் என்றும் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
ஏ இ.டி. என்பது பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒரு கையடக்கச் சாதனமாகும், இது மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு மின்சார அதிர்ச்சியை அளித்து இதயத் துடிப்பை மீட்டெடுக்கிறது.
பினாங்கில் அமல்படுத்தப்பட்ட இதேபோன்ற திட்டத்தை சிலாங்கூர் முன்மாதிரியாகக் கொண்டு தனது சொந்தக் கொள்கையை வடிவமைக்கும் என்று ஜமாலியா தெரிவித்தார்.
இதன் தொடர்பான வழிகாட்டுதல்கள் பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். இதன் மூலம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை செயல்படுத்தும் போது ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்த நிபந்தனைகளைப் பின்பற்றிச் செயல்படுவார்கள். அனைத்தும் தயாரானதும் நாங்கள் அதை படிப்படியாக வெளியிடுவோம் என்றார் அவர்.
பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில், குறிப்பாக விளையாட்டு வளாகங்கள் மற்றும் வணிக மையங்கள் போன்ற அதிக மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் ஏ.இ.டி. இருப்பது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மாரடைப்பு உள்ளது. எனவே அடிப்படை இருதய முதலுதவி (சி.பி.ஆர்.) வசதியுடன் ஏ.இ.டி. கருவிகளையும் வைத்திருப்பது நிச்சயமாக உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று அவர் கூறினார்
புதிய கட்டிடங்களில் ஏ.இ.டி சாதனங்களை பொருத்துவதை மாநில அரசு கட்டாயமாக்கும்
6 ஆகஸ்ட் 2025, 4:32 AM



