கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை சேர்ந்த தொழில்முனைவோர், MyMall இணைய வணிக தளத்தின் வழியாகப் பதிவு செய்து, தங்களின் வர்த்தகத்தை இலவசமாக சந்தைப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இத்தளத்தைப் பயன்படுத்துவதால், விற்பனைச் செலவுகளால் அதிகரிக்கும் அழுத்தத்திலிருந்து தொழில்முனைவோரின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமது அமைச்சு 2022-ஆம் ஆண்டில் MyMall தளத்தை அறிமுகப்படுத்தியதாக டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
மேலும், உள்நாட்டைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு இலவசமான முறையில் மின் வணிக சந்தைப்படுத்தலை ஏற்படுத்திக் கொடுப்பதன் வழி, ஓர் இலக்கவியல் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாட்டு தளமாகவும் MyMall கருதப்படுவதாக அவர் விவரித்தார்.
"இவ்வாண்டு ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 3,407 வணிகர்கள் MyMallஇல் பதிவு செய்து இரண்டு கோடியே 43 லட்சம் ரிங்கிட் விற்பனை மதிப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தொகை 2025-ஆம் ஆண்டில் ஏழு மாதங்களில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரிங்கிட் விற்பனை மதிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது," என்றார் அவர்.
பிரபல மின் வணிக தளங்கள் அண்மையில் விற்பனையாளர்களிடம் வசூலிக்கப்படும் விற்பனை பங்கு அதிகரித்துள்ள நிலையில், தொழில்முனைவோரின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுவான் ஹவ் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ரமணன் இவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா