(ஆர்.ராஜா) ஷா ஆலம், ஆக. 5- மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பேரவைக்கு மாநில அரசின் சார்பில் 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு அறிவித்தார். கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பேரவையின் ஏற்பாட்டில் 47 வது திருமுறை ஓதும் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயல் குழுவிடம் இந்து சங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தின் பேரில் இந்த மானியம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மிகவும் பெரிய அளவில் நடத்தப்படும் இந்த திருமுறை விழாவுக்கு ஏற்படும் செலவுகளை ஓரளவு ஈடுபட்ட இந்த மானியம் உதவும் எனத் தான் நம்புவதாக அவர் கூறினார். தமிழர் சார்ந்த கலை, கலாசாரம் மற்றும் சமய பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் உன்னத நிகழ்வாக இந்த திருமுறை நிகழ்வு விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். இளைய தலைமுறையினர் மத்தியில் சமய உணர்வினையும் உயரிய பண்புகளையும் ஊட்டுவதில் இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் துணை புரிகின்றனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்து சங்கப் பொறுப்பாளர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன் என்றார் அவர். இந்த நிகழ்வில் மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் தங்க கணேசன், மாநில பேரவைத் தலைவர் மனோகரன் கிருஷ்ணன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சரஸ்வதி வேலு ஆகியோர் உரையாற்றினர். திருமுறை ஓதும் போட்டியில் 650 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ அண்டலாஸ் பேரவை முதல் பரிசையும் காஜாங் பேரவை இரண்டாவது பரிசையும் மூன்றாவது பரிசை செர்டாங் பேரவையும் நான்காவது பரிசை பத்து கேவ்ஸ் பேரவையும் ஐந்தாவது பரிசை ஷா ஆலம் பேரவையும் பெற்றன. இந்த திருமுறை விழாவில் பிரமுகர்கள் பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் இந்து சங்கப் பேரவைக்கு வெ.20,000 மானியம்- பாப்பராய்டு அறிவிப்பு
5 ஆகஸ்ட் 2025, 3:06 PM



